இன்றைய காலகட்டத்தில், நமதுபெரும்பாலான உணரும் அறிவு விஞ்ஞான அடிப்படையில்தான் உள்ளது. நமக்கென்று ஒரு உடல் உள்ளது, ஆனால் மனத்திற்கு ஒருதனித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் நமது மூளைச்செயல் மூலமே நம்மால் நினைக்கமுடிகிறது என்று கூறுவர். ஆனால் நமது ருஷிகள், நெடுங்கால விஞ்ஞானிகள், மனித சரீரத்தையும், தனித்தன்மையும் பற்றி இவ்வாறு நினைக்கவில்லை. ஆயுர்வேதம்கூட இப்படி அலசவில்லை. அவர்கள் நமது சரீரம் ஐந்துவித கோசங்கள்,(உறைகள்)ஆல் ஆனது என்று கூறுவர். நான் என்பது எனது சரீரம் மட்டும் அல்ல. என்னிடம் பிராணனும் இருக்கிறது. மனம் என்ற கோசமும், விஞ்ஞான புத்தியும், ஆனந்தமயமான நிலையும் ஒவ்வொரு அடுக்காகச்சேர்ந்து நான் என்ற ஜீவனாக உலகில் வாழ்கிறது.
நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது மூன்று உறைகள், அடுக்குகள். அன்னமய கோசம், அதாவது நாம் உண்ணும் உணவினுடைய மாற்றமாக உள்ள சரீரம். பிராணமய கோசம், அதாவது நாம்சுவாசிக்கும் காற்று அல்லது உயிர். சுவாசித்தல் என்பது காற்று மட்டுமல்ல. நாம் கூறும் பிராணன் என்பது அதற்கும் மேலே. உயிரற்ற உடலின் உள்ளும் வெளியும் காற்று உள்ளது, ஆனால் அந்த உடலில் உயிர் இல்லை. அந்தக்காற்றின் பின்னே ஏதோ ஒரு சக்தி சரீரத்தை உயிருடன் இயங்கவைக்கிறது. அதுவே பிராணசக்தி. பிராணமய கோசத்திற்குப்பின் அதை விட நுணுக்கமான ஒன்று மனோமய கோசம், நமதுமனம், நினைத்தல்,எண்ணங்கள், என்ற ஒருஜீவனின் செயற்பாடு.