ஏன் ஒரு ஜீவன் பிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது? நமது இந்துமதகலாச்சாரத்தில், பிறப்பு என்பது புனிதமாகக் கருதப்படுகிறது. மிகவும் புண்ணியம் என்றும், தார்மீகச் செயல் என்றும், விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஏன்? பிறப்பு என்பது குழந்தைகளைச் செய்வது அல்ல, இன்றைய கூற்றுப்படி. அது குழந்தைகளைச் செய்யும் செயல் அல்ல நிச்சயமாக. அது ஒரு நெறிமுறை, காத்திருக்கும் ஒரு ஜீவனுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு. இது ஒரே ஒருமுறை நடக்கும் நிகழ்வு அல்ல. இந்துமத நபிக்கையின்படி மீண்டும் மீண்டும் பிறக்கும் வாழ்வுநெறி, கடைசியில் மோட்சம் அடையும்வரை. இந்த மோட்சம் என்பதே வாழ்வின் குறிக்கோள், ஆயினும் அதை அடைய கணக்கற்ற பிறவிகளை எடுத்தல் அவசியமாகிறது. ஒவ்வொரு பிறவியும் எல்லா ஜீவராசிகளுக்கும் முக்கியமானதும்கூட. ஏதேனும் ஒரு ஜீவனுடன் கர்மபலன் அடிப்படையில் ஒரு சேர்க்கை அமைகிறது, மகனாகவோ, மகளாகவோ, அல்லது வேறு உறவினாலோ. அந்த ஜீவனுக்கு உலகில் பிறவியெடுத்து, வாழ்ந்து, மேம்பட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் இந்த பிறவிப்பயணம் மீண்டும் தொடரப்பட்டு மோட்சத்தின் வாயிலை நோக்கிச்செல்ல வழிவகை செய்கிறது.
எனவே பிறப்பு என்பது மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு தார்மீக வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. முன்வினைப்பயனை அனுபவித்து ஒரு ஜீவனின் பயணத்தை மேற்கொள்ள அவசியமாகிறது. எந்தமாதிரி சூழ்நிலையில் இது தடைபடுகிறது? முதலாவதாக கருச்சிதைவு (அ) கருக்கலைப்பு. தன்னிச்சையாக ஒரு குழந்தை வேண்டாம் என்று கூறும் நிலைப்பாட்டில், நமது கலாச்சாரத்தின்படி, கருச்சிதைவு மேற்கொண்டால், அதை பிரம்மஹத்தி என்று கூறுகிறோம். பிரம்மஹத்தி என்பது என்ன? அதன் பொருள் யாது? இன்றைய பிராம்மணன், பிராம்மணத்துவம் என்பது என்ன? நம் கலாச்சாரத்தில் பிராம்மணன் யார் என்பதற்கு மனுஸ்ம்ருதியில் விளக்கம் உள்ளது. பிராம்மணன் எல்லோருக்கும் நண்பன், அவனைக்கண்டு ஒருவரும் பயம் கொள்ளத்தேவையில்லை, ஏனெனில் அவன் ஒருவரையும் தன் மனத்தால், பேச்சால், உடலால் துன்புறுத்தமாட்டான், பிராம்மணன் எப்பொழுதும் உண்மையே பேசுபவன், அஹிம்சாவாதி, புலனடக்கம் செய்தவன், ஒரு அநீதிச்செயலும் செய்யமாட்டான், எந்த ஒழுக்கமின்மைக்கும் இடங்கொடான், இவ்வாறு பல்வேறு குணாதிசயங்கள் கூறப்பட்டுள்ளன. பிராம்மணன் என்பவன் பிரம்மாவை அறிந்தவன். பிரம்மா என்பவர் சூதுவாதற்ற தூயஅன்பின் அடையாளம். எனவே பிரம்மஹத்தி என்று குறிப்பிட்டு அதைக் கடுமையான பாவச்செயல் என்று சொன்னால், அது ஒரு களங்கமற்ற ஜீவனைக் கொல்வதற்குச்சமம் என்றே பொருள். பிறக்கவுள்ள குழந்தையைக் கொல்வதும் பிரம்மாவைக் கொல்வதும் கொடிய பாவச்செயல் என்பது தெளிவாகிறது. ஆகவே பிரம்மஹத்தி என்று கூறப்படுகிறது.